சனி, 19 ஜூன், 2010

எங்கெங்கு காணினும்..

.
.
கலைந்து கலைந்து
உருவங்கள்
சிதைந்து கொண்டேயிருக்கும்
மேகக் கூட்டங்களிலும்
இப்போது
உன் முகம் மட்டுமே
தெரிகிறதெனக்கு..!
.
.

செவ்வாய், 15 ஜூன், 2010

கடவுளர்கள் ஓய்வெடுக்கிறார்கள்..


.

அது 'அரக்கி'யாகி
அனேக காலமாகிவிட்டதென்பதை
அறியாமல் இன்னமும்
நீதியை 'தேவதை' என்போரே..
இப்போதேனும்
அதன் கோர முகம் கண்டீரா..?

உங்கள்
வலிய சட்டங்களின்
இண்டு இடுக்குகளுக்குள்
அதன் 'தேவதை முகம்'
புதைக்கப்பட்டு விட்டதை
இப்போதேனும் உணர்ந்தீரா..?

இனி உங்கள்
முறையீடுகளோ வேண்டுதல்களோ
தொழுகைகளோ பிரார்த்தனைகளோ
எதுவுமே செவிமடுக்கப்படாமல் போகலாம்..

காரணம்
கலிகாலமென்பது
ஒருவேளை உங்கள் கடவுளர்கள்
ஓய்வெடுக்கும் காலமாய்
இருந்தாலுமிருக்கலாம்..!
.
.

வியாழன், 10 ஜூன், 2010

பறவைகளற்ற வானம்

.
.
எதிரெதிர்த் திசைகளில்
சாலையொன்றைக் கடக்க நேர்ந்தபோதுதான்
எங்களுக்குள் நிகழ்ந்தது
அந்த முதலும் கடைசியுமான சந்திப்பு..

விளங்க முடியாத
சில கவிதை வரிகளை விடவும்
ஆழமாய் இருந்தன
சாலையைக் கடந்த பின்னும்
என் மீது நீடித்திருந்த அவளின் பார்வைகள்..

திருவிழாக் கூட்டமொன்றில்
குழந்தையைப் போல
குதூகலித்திருந்தது என் மனம்..

வானத்தை நோக்கியபோது
அக்கணம் அது பறவைகளற்றிருந்தது..!
என்னை மட்டும்
பறக்க அழைத்ததாய்த் தோன்றியது..

சிறகுகளின்றிப்  பறந்த
அத்தருணத்தைப்  போலவே
இருக்கின்றன
வாழ்வின் சில தருணங்கள்
விவரிக்க முடியாதவைகளாய்..!
.
.

இது நிலவுக் கவிதையன்று..


எங்கே உன் கவிதைகள்
எனக் கேட்ட உனக்கு
தருவதற்கென்று தற்சமயம்
நீ விரும்பும் கவிதைகளெதுவும்
கைவசமில்லை என்னிடம்..

இப்போதெல்லாம்
இயலாமையின் ஆற்றாமையின்
இருள் கவிந்தேயிருக்கும் என் கவிதைகள்
ஒருபோதுமுனக்கு உவப்பளிக்கமாட்டா..

உடைக்கப்பட்ட
என் நிலவின் துண்டுகளை
தங்கள் வீதிகளில் கண்டெடுத்தவர்களை
சேகரித்து அனுப்பச் சொல்லியிருக்கிறேன்
என் முகவரிக்கு..

முழுவதும் வந்து சேர்ந்த பின்
ஒருவேளை
நானுனக்குப் பரிசளிக்கக் கூடும்
நீ விரும்பியதொரு
நிலவின் கவிதையை.


Twitter Bird Gadget