செவ்வாய், 13 டிசம்பர், 2011

மழைக்கால ஞாயிறு


பொழிந்தது போதுமெனச்
சற்றே ஓய்வெடுத்துக் கொண்டது வானம்..
இன்னும் தாகமெனத்
தவளைகளைத் தூதனுப்பியது பூமி..

இடையறாத இடியின் இரைச்சலில்
இயல்பிழந்தது இரவு..
நாயொன்றின் சோகந்தோய்ந்த முகத்தை
நிழலாடச் செய்தது தொலைவில் அதன் ஓலம்..
தள்ளிப்போன விடியலின் தயவில்
இன்னும் கொஞ்சம் நீண்டது
தடைபட்ட உறக்கம்..

புதிதாய்ச் சமைந்த பெண்ணென
மெல்ல எட்டிப் பார்த்த ஞாயிறு
பின் வெடுக்கென மேகக்கதவுகளின் பின்னே
தன் தலையை இழுத்துக் கொண்டது ..
பரபரப்பில்லாத இந்த மழைநாள் என்னைப்போலவே
ஞாயிற்றுக்கும் ஞாயிறென ஆனது..

வானத்தை வெறித்தபடி
வெறுமையாய்க் கழிந்த இம்மழை ஞாயிற்றில்
கடைசி வரை வெளியே வரவேயில்லை
நானும் ஞாயிறும்!



3 கருத்துரைகள்:

சுப்பு சொன்னது…

கவிதை மிகவும் அருமை
"தவளைகளைத் தூதனுப்பியது பூமி"
அருமையான கற்பனை,
வாழ்க உங்கள் தமிழ்,
வாழ்க உங்கள் கவி புலமை

அப்துல் காதர் சொன்னது…

தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி திரு.சுப்பு அவர்களே!

dafodil's valley சொன்னது…

கடைசி வரி மிக அருமை சகோ! முழு கவிதையும் நன்றாக இருந்தது...மிகவும் ரசித்து படித்தேன்.

Twitter Bird Gadget